Breaking News

தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

லஞ்சம் இல்லாமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது எனக் கூறிய உயர் நீதிமன்றம், இந்த அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரித் துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாத்தாவின் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்வதற்காக உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து ஓராண்டு கடந்த பிறகும் பம்மல் சார் பதிவாளர் பத்திரங்களை வழங்கவில்லை எனக் கூறி, பத்திரங்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச லாவண்யத்தை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதும், தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன் எந்தெந்த அதிகாரிக்கு எவ்வளவு கையூட்டு வழங்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் பட்டியிட்டார்.

இந்த பட்டியலின்படி, ஒரு கிரவுண்டு நிலத்தை பதிவு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகச் சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன், பத்திரப் பதிவுத் துறை ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளது எனவும், லஞ்சம் கொடுக்காமல் சார் பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடைபெறாது என்ற நிலை நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், இந்த லஞ்ச நடவடிக்கைகளைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கில் வணிகவரித் துறை செயலாளரையும், டி.ஜி.பி.யையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டுள்ளார். 

பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொடுக்க தரகர்கள் இருப்பது அரசுக்கு தெரியுமா? 

சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறதா?

கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டன?

எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது?

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

தவறிழைத்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதன் முடிவுகள் என்ன?

லஞ்சப் பணத்தை பெற்றுக் கொடுக்கும் தரகர்களை ஒடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சார் பதிவாளர்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்கின்றனரா? சொத்து குவித்ததாக ஏதேனும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா?

மூன்று வாரங்களில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திரும்ப கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பம்மல் சார் பதிவாளர் ஓராண்டுக்கு மேல் ஆவணங்களை வைத்திருந்தது ஏன்? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் டிசம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்