Breaking News

சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8-ம் நம்பர் கடையை வாடகைக்கு எடுத்து டிராவல் எக்சேஞ்ச் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகிறோம்.  அதன் நிர்வாக இயக்குநராக நான் உள்ளேன். ஆனால் இந்த கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை.  பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைக்குப்பிறகு எங்களது தொழில் நசிவடைந்து விட்டது. இந்த சூழலிலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 3 ஆயிரத்து 702 மாத வாடகையை நிலுவையின்றி செலுத்தி வருகிறோம். ஆனால் திடீரென மாநகராட்சி நிர்வாகம் இந்த வாடகையை 21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி இந்த வாடகையை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தவில்லை. எனவே வாடகையை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது. அப்போது   மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளி்ன் வாடகை 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு உத்தரவுப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படிதான் மனுதாரரின் கடைக்கும் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரினார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்