Breaking News

பால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு

பால் கலப்படம் தொடர்பான வழக்கு: திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்மனு

பாலில் கலப்படம் செய்வதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், திருச்சியில் இருந்து பெறப்பட்ட 2 மாதிரிகள் பாதுகாப்பற்றது என சுகாதாரத்துறைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் கெட்டுப்போகாமல் இருக்க அதில் ரசாயணங்கள் கலக்கப்படுவதாகவும், இந்தப்பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாகவும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

கலப்பட பாலைத் தடுக்கவும், பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கலப்பட பாலைத் தடுப்பது தொடர்பாகவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவி்ட்டிருந்தது.

அதன்படி, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தேசிய தரச்சோதனை மையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்யவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கலப்படம் தொடர்பாக புகார் செய்ய வசதியாக இலவச தொலைபேசி மற்றும் ஆன்லைன் வசதிகளை தொடங்கவும் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்டு மாநில கமிட்டியும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவில் கமிட்டியும் அமைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அரியலூர், மதுரை உள்பட 32 மாவட்டங்களிலும் கடந்த 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில் எதுவும் பாதுகாப்பற்றது என நிரூபனமாகவில்லை. ஆனால் 187 பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டது. இதுதொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 81 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரூ. 10 லட்சத்து 26 ஆயிரத்து 300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பால் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 338 மாதிரிகளில் 196 பால் பொருட்கள் பாதுகாப்பானது என்றும், 11 பால் பொருட்கள் பாதுகாப்பற்றது என்றும், 132 பால் பொருட்கள் தரமற்றவை என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக, 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள் ளது.

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை சென்னை கிண்டியில் உள்ள சோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது. இதில் மொத்தம் 106 மாதிரிகளில், திருச்சியில் இருந்து வந்த 2 பால் மாதிரிகள் பாதுகாப்பற்றது என தெரிய வந்தது. அதையடுத்து அந்த பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் இருந்து வந்த 22 பால் மாதிரிகள் தரம் குறைந்து இருப்பதும், 82 மாதிரிகள் தர கட்டுபாடு மையத்தின் வழிகாட்டுதல்படி சரியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை தவிர்த்து பால் உள்ளிட்ட உணவுப்பொருட்களை அந்த இடத்திலேயே பரிசோதனை செய்வதற்கு வசதியாக நவீன கருவிகளை பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்