Breaking News

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் ? இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்டது ஏன் ? இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2010ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பாணையை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.  தற்போது நீட் தேர்வு முடிவுற்ற நிலையில், அதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் 2010ம் ஆண்டு அறிவிப்பாணையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற விதியை திருத்தி, நீட் தேர்வு மதிப்பெண்களுடன், ப்ளஸ்2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நடத்த கோரி காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்றுபேர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.  அந்த மனுவில், இது சம்பந்தமாக மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை மருத்துவ கவுன்சில் தரப்பில் நிராகரித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள்,

1) நீட் தேர்வு மூலம் அனைத்து வகையான மாணவர்களின் திறமையை மதிப்பிட முடியுமா

2) நீட் தேர்வில் CBSE  பாடதிட்டத்தின் அடிப்படையில் கேள்வி கேட்பதால், இந்த CBSE பாடத்திட்டத்தின் கீழ் படித்துள்ள மாணவர்களுக்கு எளிதாகவும் , பிற பாடதிட்ட வழியில் படித்த மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பது தெரியாதா

03) CBSE பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் 5-10% பேரே நீட் நுழைவுத் தேர்வு பங்கு பெற்றுகின்றனர், ஆனால் அவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்புக்கான இடத்தை பெறுகின்றனரே ?

04) மாநில அளவில் பல்வேறு பாடதிட்டங்கள் இருக்கும்போது , CBSE மட்டுமின்றி, ஏன் பொதுவான ஒரு பாடதிட்டத்தில் தேர்வு நடத்தக்கூடாது

05) மருத்துவ சேர்க்கைக்கு செய்முறை தேர்வில்லாத நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் பட்சத்தில் , மாணவர்கள் +1 மற்றும் +2 தேர்வுகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள் மாறாக நீட் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தங்களை தயார் செய்வார்களே

06) ஒரே தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பதற்கு பதிலாக மருத்துவ படிப்புக்கு நீட் மதிப்பெண்ணுடன் +2 மதிப்பெண்ணையும் சரி சமமாக கணக்கில் எடுத்துக்கொண்டு மாணவர்களின் திறமைகளை கணக்கில்
கொள்வது ஏன் சரியாக வராது ?

07) +2 தேர்வுகளை தொடர்ந்து  நீட் தேர்வுகளை நடத்தி முடித்தால் மாணவர்களின் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கலாமே, எனவே அவ்வாறு நீட் தேர்வை நடத்த சாத்தியமா ?

08) மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கிடும் பட்சத்தில், நாடு முழுவதும் காளன்களை போல நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் முளைத்துவிடும், மேலும் பள்ளிப்படிப்பை முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட வழி வகுக்காதா ?

09) நாடு முழுவதும் இயற்பியல் , வேதியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பாடதிட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்யலாமே ? இதன் மூலம் அனைத்து வகையான பாடதிட்டத்தின் வேற்றுமைகளையும் களையலாமே ?

10) புதிதாக உருவாக்கப்படும் பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களை தரமாக பயிற்றுவிக்க,  இயற்பியல் , வேதியல், உயிரியல், கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாதா ?

11) கல்வித்தரம் நீர்த்து போகாமல் பாதுகாப்பதற்கும், நீட் தேர்வுக்கு மாணவர்களை உருவாக்காமல் இருப்பதற்கும், காலத்துக்கு ஏற்றார் போல் பாடத்திட்டத்தை மாற்றாததற்கும் தமிழ அரசு பொறுப்பில்லையா ?

12) தமிழக அரசு இங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க தகுதியான ஆசிரியர்களை ஏன் நியமிக்க கூடாது ?

ஆகிய 12 கேள்விகளை எழுப்பியதோடு , அதற்கு வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பொதுநலம் சார்ந்திருப்பதால், இந்த வழக்கை  தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள்