Breaking News

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் 41 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து
தமிழகத்தில் 41 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன
ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்<img src="http://www.sattappadhukappu.com/wp-content/uploads/2017/05/Screenshot_20170514_194649-1
சென்னை, மே.19-
பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் 41 மதுபானக் கடைகளை இழுத்து மூடியுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்த மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, மூடப்பட்ட இந்த மதுபானக் கடைகளை ஊருக்குள், குடியிருப்பு பகுதிக்குள் கொண்டு வர தமிழக அரசு முடிவு எடுத்தது. கடைகளை அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் மதுபானக் கடைகள் திறப்பதினால், தங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பெண்கள் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவோ, தடியடி நடத்தவோ கூடாது என்றும் கிராம சபைகளில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றினால், அந்த கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது’ என்றும் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கடந்த வாரம் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில், பிரபாகரன் உட்பட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் கோடை விடுமுறை கால நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, ‘பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள் என்பதற்காக, தமிழகத்தில் இதுவரை 41 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றியும், டாஸ்மாக் விதி81-யை பின்பற்றியும் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன’ என்று கூறினார்.
இழுத்து மூடவேண்டும்
அப்போது ஒரு மனுதாரர் தேசிகன் சார்பில் ஆஜரான வக்கீல் கே.பாலு, ‘வேளச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அருகேயுள்ள கடைகள் எல்லாம் மூடப்பட்டதால், இந்த கடைகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்த கடைக்கு அருகே வழிப்பாட்டு தலங்களும் உள்ளன. எனவே, இந்த கடையை மூடக் கோரி சென்னை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறினார்.
இதையடுத்து, ‘இந்த கடையை உடனே இழுத்து மூட வேண்டும் என்றும் இந்த கடை செயல்படுவது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்டு, 3 வாரத்துக்குள் தகுந்த முடிவினை எடுக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டன
இதேபோல, மற்றொரு மனுதாரர் ஜெயகுமார் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணியன், ‘சேலம் மாவட்டம் புதுச்சாம்பள்ளி கிராமத்தில் அங்கன்வாடி அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இதில் குடித்து விட்டு போதையில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து, அங்கன்வாடியில் உள்ள குழந்தை மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து இந்த மதுபானக் கடையை இழுத்து மூடப்பட்டன. இந்த கடையை மீண்டும் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த கடையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பரிசீலிக்கவேண்டும்
இந்த 9 மனுக்களையும் விசாரித்த பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த பொதுவான உத்தரவில், ‘மதுபானக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்றோ, கடையை திறக்கக்கூடாது என்றோ பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால், அவர்களது உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பு அளிக்கவேண்டும். தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மதுபானக் கடைகள் திறப்பதற்கும்
எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புகார் மனு கொடுத்தால், அந்த மனுவை 3 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். அதுவரை அந்த கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஏற்கனவே இருக்கின்ற கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுத்தாலும், அந்த புகார் மனுவையும் 3 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவினை எடுக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். பின்னர், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
……………………..

கருத்துக்கள்

கருத்துக்கள்